Sunday, February 9, 2014

இரண்டாவது தாலி -(எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
-----------------------------------------------------------------------
ராம்நாத் ஒரு காஸ்ட் அக்கௌன்டன்ட்.அறுபது வயதை தொட போகிறவர். கொல்கத்தா வாசி.ஆறடி உயரம், அதற்கு ஏற்ற பருமன்.கோதுமை நிறம், பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்துகின்ற உருவ அமைப்பு.பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார். சகல வசதிகளும் நிறைந்த ஆடம்பரமான பங்களா, கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள், வாகனங்கள் என்று உயர்-மட்ட வாழ்கை. அவரது மனைவி ஜனனி (வயது 53).பட்டதாரி, லக்ஷ்மிகரமான முகம்,மேல்-தட்டு மகளிற்கே உண்டான ஒரு கம்பீரம்.கலை,இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவள். பூஜை புனஸ்காரத்தில் நம்பிக்கை உடையவள்.

மகன் சூரஜ்(வயது 26) அமெரிக்காவில் ,ஹார்வர்ட் கலாசாலையில்,பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறான். மகள் ஸ்வேதா (வயது 21) அகமதாபாத்தில் நிர்வாக-முதுகலை படித்து கொண்டிருகிறாள்.

அழகான, அளவான, குடும்பம். பணமோ ஒரு பிரச்சினையே கிடையாது. இங்கு ராம்நாத் பற்றி ஒரு வார்த்தை. மிகவும் கீழ்மட்ட நிலையில் இருந்து படித்து தன் சொந்த முயற்ச்சியால் முன்னேறியவர். அவருடன் கூட பிறந்தவர்கள் ஆறு பேர். அப்பா ப்ரோகிதம் செய்து வந்தவர். இன்று அவரும் சரி, மற்ற சகோதரர்களும் ஒரு நல்ல வாழ்கை தரத்தில் உள்ளவர்கள்.ராம்நாத்துக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக கிடையாது. அவரவர் வாழ்கையை நிர்ணயிப்பது அவரவர் எண்ணங்களே என்பது அவரது கொள்கை. குடும்ப அங்கத்தினர்களின் நச்சரிப்புக்காக கோவிலுக்கு செல்வார் மற்றும் சடங்குகளில் பங்கேற்பார். மனைவி,குழந்தைகளின் நம்பிக்கையை குறை கூற மாட்டார். அவர்களது செயல்பாடுகளிலும் குறிக்கிட மாட்டார்.

ஜனனிக்கு ஆன்மிக விஷயங்களில் அதீத பற்று. அதுவும் ஜோசியம்,க்ரஹ பரிகாரம், தோஷ நிவர்த்தி-இதில் எல்லாம் அசாத்ய நம்பிக்கை.ராம்நாத்துக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே ஒழிய தான தருமங்கள் நிறைய செல்வார். ஏழை-பாழைகளுக்கு கல்யாண சிலவு, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி,முதியோர்/அனாதை இல்லங்களுக்கு தானம் என்று வாரி வாரி வழங்குவார்.

நிறைவாக போய் கொண்டிருந்த இவர்கள் வாழ்கை பயணத்தில் திடீரென்று ஒரு குழப்பம் விளைந்தது. மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரமானந்த கிரி சுவாமிகள் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்தார். ஜனனி சுவாமிகளை தங்கள் இல்லத்திற்கு அழைத்தாள். அவரும் வர சம்மதித்தார். கணவரிடம் கெஞ்சி கூத்தாடி, அவரும் ஒத்துழைக்க சுவாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்றனர் தமபதியினர். பாத பூஜை,பிக்ஷை, எல்லாம் ஆன பின், சுவாமிகள் சிறுது நேரம் அளவளாவிவிட்டு,ஆசிர்வாதம் வழங்கி பின் புறப்பட ஆயத்தமானார். சிறுது நேரம் கண்ணை மூடி த்யானத்தில் மூழ்கினவர் ராம்நாத்தை பார்த்து 'இரண்டாவது தாலி' கட்ட போறயாக்கும்-நல்லது நடக்கட்டும்" என்று ஒரு மெல்லிய புன்முறுவலுடன் சொன்னார்.பின் ஜனனியை பார்த்து "சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது" என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

கணவன் மனைவி இருவர்க்கும் ஒரே குழப்பம். சுவாமிகள் என்ன சொன்னார் என்று புரியவில்லை. ராம்நாத் குணத்தில் அப்பழுக்கற்றவர்,ஏக-பத்னி-விரதனாக வாழ்பவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சுவாமிகளின் கூற்றுக்கு ஏற்ப மாறின. ஷில்பா என்ற ஒரு இளம் பெண் ராம்நாத்தின் காரியதரிசியாக வேலைக்கு சேர்ந்தாள். அலுவலக வேலை நிமித்தமாக வீட்டுக்கும் வர தொடங்கினனாள்.கவர்சிகரமான உடை, நுனி நாக்கு ஆங்கிலம், ராம்நாதிடம், குழைந்து குழைந்து பேசுவது என்று தேவையில்லாத நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டாள். இதை எல்லாம் நினைத்தே ஜனனி நோய்வாய்பட்டு விட்டாள். பார்காத வைத்தியம் இல்லை. காண்பிக்காத மருத்துவர்கள் இல்லை. என்ன நோய் என்று பிடி படவே இல்லை. தான் இன்னும் அதிக நாள் உயிர் வாழ மாட்டோம் என்று காரணமில்லாமல் நம்ப தோன்றினாள்.

சூரஜ், ஸ்வேதா இருவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆய்வு கட்டுரை முடிக்க வேண்டி இருப்பதால் தன்னால் இப்போது இந்தியா வர இயலாது என்று வருத்ததோடு தெரிவித்தான் மகன். தினம் இரண்டு வேளையும் 'ஸ்கைப்' மூலமாகவும் ,கைபேசியிலும் தாயோடு பேசி உற்சாகம் ஊட்ட முயன்றான். மகள் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து தாயை கவனித்து கொண்டாள். மகளிடம் 'ஷில்பா' விஷயத்தை சொல்லவும் முடியவில்லை ஜனனியால். ராம்நாத் மிகுந்த மன அழுத்தத்தில் தவித்தார்.

ஒரு நாள் இரவு திடீரென்று ராம்நாத்தை அருகில் அழைத்தாள் ஜனனி. "என்னங்க - நான் ஒன்ணு சொல்வேன் - நீங்க தப்பா எடுத்துக்க கூடாது" என்றாள். "அசடு- நமக்குள்ளே இந்த பீடிகை எல்லாம் எதற்கு- தைரியமா சொல்லு" என்றார். "வந்து, வந்து நான் இன்னும் ரொம்ப நாள் இருப்பேன் என்று தோணலை. நான் போன அப்புறம் நீங்க தனி-மரமா ஆயிடுவேள். அந்த குட்டி ஷில்பா உங்களுக்கு பொருத்தமா இருப்பா. அவளுக்கு ஆட்சேபணை இல்லேன்னா அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்.உங்களுக்கு என்ன? வயது அறுபதை நெருங்கினாலும் உடம்பை கட்டு கோப்பா வெச்சு இருக்கேள். முப்பதஞ்சுக்கு மேல சொல்ல முடியாது இத என்னோட கடைசி ஆசையா நினைச்சுக்குங்கோ" என்றாள்."யோசிச்சு பாருங்கோ- சுவாமிகள் என்னத்துக்கு "இரண்டாவது தாலியை" பற்றி பேசணும் என்று தொடர்ந்தாள். ராம்நாத் தன் கையால் அவளது வாயை பொத்தினார். அவருக்கு தொண்டை அடைத்தது. உணர்ச்சி பெருக்கால் வார்த்தைகள் வெளி வரவில்லை. ஆதுரமாக ஜனனியின் தலையை கோதியபடி "அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து விடுவாய். சூரஜ், ஸ்வேதா எல்லார் கல்யாணமும் நடக்கும். பேரன்,பேத்திகளோடு ஜாம் ஜாம் என்று சந்தோஷமாக வளைய வருவாய்" என்று கூறி "மனதை போட்டு அலட்டிக்காதே- நிம்மதியாக தூங்கு" என்று கூறி வெளியேறினார்.

மறு நாள் காலை ராம்நாத்தின் இல்லத்திற்கு திடிரென்று திருவானைக்காவல் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் வருகை தந்தார். கனபாடிகள் எண்பது வயதை கடந்தவர். ஆஜானபாகுவான தேகம். தும்பை பூ கச்சம்- உத்தரியம்- உடம்பெல்லாம் விபூதி பட்டைகள், கழுத்தில் ருத்ராக்ஷம்- மகரகண்டி- கையில் பரமாச்சார்யாள் சுயமாக அணிவித்த தங்க தோடா. வேதத்தை கரைத்து குடித்தவர். வேதமே அவர் மூச்சு- சாஸ்திர சம்பிரதாயமே அவரது வாழ்கை முறை . ராம்நாத்தின் ஆஸ்தான புரோகிதர், "என்ன ஆச்சு ஜனனிக்கு- கேள்விபட்டேன்- ஒரே வியாகூலமக இருந்தது- அதான் ஒரு தடவை பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன் " என்றார்.

ஆதியோந்தடமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தனர் தம்பதியினர். ஒரு தடவைக்கு இரு தடவையாக கேட்டார்"சுவாமிகள் என்ன சொன்னார்"? இரண்டாவது தாலி என்றா?.சிறுது நேரம் ஒன்றும் சொல்லாமல் கண்ணை மூடி கொண்டு மௌனமாக இருந்தார். பிறகு என்னவோ பொறி தட்டியது போல "ராமநாதா நீ எந்த வருஷம் பிறந்தாய் என்று கேட்டார்".கேள்வியின் உள்நோக்கத்தை உணராத ராம்நாத் "1954 மாமா" என்றார். கனபாடிகள் உடனே "அதில்லடா- தமிழ் வருஷத்தை கேட்டேன்" என்றார். "தெரியலையே" என்று கையை பிசைந்தார் ராம்நாத். ஜனனி உடனே "ஏன்னா- அந்த ஜாதக நோட்டை எடுத்து கொடுங்களேன்" என்றாள், அலமாரியில் இருந்து நோட்டை எடுத்து கனபாடிகளிடம் கொடுக்க, எண்பது வயதுக்கும் கண்ணாடி தேவை படாத அவர் அதை பிரித்து ராம்னத்தின் ஜாதகத்தை பார்த்தார். சுப ஜனனம்-இரவு-11.40 . விஜய வருடம்- தை மாதம் 5ம் நாள்- புனர்வசு நக்ஷத்ரம் என்பதை உரக்கவே படித்தார்,

ஜனனியை பார்த்து "அசடே-சுவாமிகள் ராமநாதனின் ஷஷ்டி-அப்த-பூர்த்தியை தான் சூசகமாக குறிபிட்டுள்ளார்". நீ என்னவோ ஏதோ என்று பயந்து போயிருக்கிறாய்" என்றார். 60ம் கல்யாணம் அமோகமாக நடக்கும்-நானே நடத்தி வைக்கிறேன்- "இரண்டாவது தாலியை" தொங்க தொங்க கட்டி கொண்டு-நீ பழுத்த சுமங்கலியாக இருப்பாய்" என்று ஆசிர்வதித்தார். அந்த வேத விற்பன்னரின் வார்த்தைகளை கேட்ட ஜனனிக்கு அப்போதே உடம்பு சரியாக ஆகிவிட்டது போல ஒரு உணர்வு.

No comments:

Post a Comment