Wednesday, March 5, 2014

சாந்தி’ கல்யாணம்
----------------------------
எழுதியவர்- சுந்தரேசன் சுரேஷ்
=========================

பிரம்மா கருப்பு "பெயிண்ட்"டப்பாவில் கை தோய்த்து விட்டு படைத்து விட்டானோ என்று எண்ண வைக்கும் நிறம் சாந்திக்கு (27).குள்ளம் என்றுதான் கூற வேண்டும்.இரட்டை நாடி சரீரம். தலையில் அதிக மயிரும் கிடையாது. தகர "டின்"இல் ஆணியால் இழுப்பதை ஒத்த குரல்.ஆக மொத்தம் "சாமுத்ரிகா"லக்ஷணம் ஒன்று கூட பொருந்தியவள...் இல்லை.இவளுக்கு எப்படி கல்யாணம் ஆக போகிறதோ என்ற கவலையே இவளது பெற்றோர்கள் நாகநாதன்-வசந்தா தம்பதியர்களுக்கு எப்போதும்.

பார்க்க நன்றாக இருக்க மாட்டாளே ஒழிய சாந்தி குணத்தில் தங்க கம்பி.வீட்டு வேலைகள் அத்தனையும் அத்துபடி.பெற்றோர்களை ஒரு வேலை செய்ய விடமாட்டாள்.வங்கிக்கு போவது,மின்சார கட்டணம்,தொலைபேசி கட்டணம் கட்டுவது,மளிகை-காய்கறி வாங்கிபோடுவது என்று வெளிவேலைகள் சகலமும் அவள்தான்.அதே மாதிரி உள் வேலைகள்- சமையல்,துணி துவைப்பது,பாத்திரம் தேய்ப்பது,பெருக்கி மெழுகுவது-என்று எல்லாவற்றையும் அவளே செய்து முடிப்பாள். அக்கம் பக்கத்தாரிடம் அப்படி ஒரு நல்ல பெயர். வலிய போய் உதவி செய்வாள். சாயங்கால வேளையில்,பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுப்பாள்.

அண்டை அசல் மாமிகள் எல்லாம் "நிறம் தான் கொஞ்சம் மட்டு"- "மத்தபடி இவளுக்கு என்ன குறை"?- "எல்லாருக்கும் என்ன குரல் எம்.எஸ் மாதிரி அமைஞ்சுடருதா"?- "ரெட்டை நாடியா இருந்த என்ன"?- "இப்ப குஷ்பூ குண்டா இல்லையா"?-"இவளுக்குன்னு ஒத்தன் பிறக்காமலா போயிருப்பான் "? - "வேளை வந்தா தானா நடக்கும்" என்று தங்களுக்குள் பேசிகொள்வார்கள். திருமணஞ்சேரிக்கு சாந்தியையும் அவள் பெற்றோர்களையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தவர்களும் அவர்களே.

நாகநாதன் "அம்மா சாந்தி-பிள்ளைக்கு பிள்ளையா,பெண்ணுக்கு பெண்ணா,இப்படி நீயே எல்லாம் பண்றத்துக்கு அந்த பகவான் உன்னை நன்னா வெக்கணும்"என்பார். வசந்தாவும் "இவளுக்கு நல்ல எடத்திலே கல்யாணம் ஆகணும்-குழந்த தீர்காயுசா இருக்கணும்"என்று சொல்வாள். சொல்லி விட்டு நாம் நினைத்தது ஆக மாட்டேன் என்கிறதே என்ற தாபத்தில் இருவரும் தவிப்பார்கள்,

ஒரு பிள்ளை வீட்டார், முகத்தில் அறைந்த மாதிரி இந்த மாதிரி பெண்களை வைத்து கொண்டு கல்யாணம் ஆக வேண்டும் என்று எதிர்பார்பதே தவறு என்று கூறினர். எங்காவது இரண்டாம் தாரமாக கட்டி கொடுங்கள் என்று இலவச ஆலோசனை வழங்கினவர்களும் உண்டு. மற்றும் சிலர் "ஏம்மா இப்போதுதான் பல "ப்யூட்டி-பார்லர்கள்"வந்துள்ளதே"- "அதற்க்கு போய் கொஞ்சம் நிறத்தையும் வெளுப்பாக மாற்றி கொண்டு,எடையையும் குறைத்து கொள்ள கூடாதோ" என்று ஹிதோபதேசம் செய்தனர். தான் இருக்கிறபடி ஏற்று கொள்பவர் நிச்சயம் ஒரு நாள் வருவார் என்பது சாந்தியின் திடமான நம்பிக்கை.

ஒரு வாரத்திற்கு முன் தெரிந்தவர்கள் மூலமாக ஒரு ஜாதகம் பொருந்தி இருந்தது.நாகநாதன் முன்னாடியே சொல்லி விட்டார். முதலில் பெண்ணின் "போட்டோவை" பாருங்கள். சம்மதம் என்றால் நேரில் வந்து பெண் பாருங்கள் என்று. பையன் பெயர் விவேக்- B.Tech., M.B.A.- Cognizant இல் வேலை-ஆறடி உயரம்- உயருத்துகேற்ற பருமன்- கோதுமை நிறம்- "ஜம்மென்று ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி இருந்தான். நாகநாதனுக்கும்,வசந்தாவிற்க்கும் நம்பிக்கையே இல்லை. "திரும்ப ஒரு முறை சொஜ்ஜி-பஜ்ஜி- சாப்பிட்டுவிட்டு போக போகிறார்கள்"- "பாவி பெண்ணுக்கு எப்போதுதான் வாழ்கை அமைய போகிறதோ"? என்று நொந்து கொண்டனர்.

பெண் பார்க்க வர போகிறார்கள் என்று கேள்விபட்டதில் சாந்திக்கு விசேஷமாக ஒரு உணர்ச்சியும் ஏற்படவில்லை. அப்பா,அம்மா கவலை தீருவதற்க்காவது நமக்கு இந்தே இடம் அமையட்டுமே என்று நினைத்து கொண்டாள். தோழி ஒருத்தி "ஒவ்வொரு திங்க கிழமையும்,பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று,சிவனுக்கு தலையில் பால் விட்டு பாரு"-"நிச்சயமாக தகையும்" என்று சொன்னதை செய்யலாம் என்று நினைத்து கொண்டாள்."இந்த எடமும் முடியலே என்றால் கொஞ்சம் விஷத்தை வாங்கி அவளுக்கும் கொடுத்துவிட்டு நாமும் சாப்பிட வேண்டியதுதான்- வேறு வழியே தெரியல்லே" என்று நாகநாதன் வசந்தாவிடம் புலம்பியதை கேட்டதில் இருந்து வேற இவளுக்கு மனசே சரி இல்லை.

குறிப்பிட்ட நாளும் வந்தது. விவேக்கின் அப்பா,அம்மா,சகோதரி மூவரும் வந்தனர். பெண் பார்த்து விட்டு சென்றனர். "போய் அப்புறம் தகவல் தெரிவிக்கிறோம்" என்ற ஆரம்பித்த அப்பாவை இடைமறித்தான் விவேக். நாகநாதனை நோக்கி "கொஞ்ச நேரத்துக்கு எங்களுக்கு ஒரு தனி அறை ஒதுக்கமுடியுமா"? "எங்களுக்குள் பேசி கொள்ள" என்று கேட்டான். உள் அறையை காட்டினார் நாகநாதன். இங்கிதம் தெரிந்து அங்கிருந்து நகர்ந்து கொண்டார்.

விவேக்கின் அம்மாதான் ஆரம்பித்தாள்"பொண்ணு பாக்க நன்னாவே இல்லையே"- "கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை"-"கை காரியம் எல்லாம் தெரியுமாம்"-"வீட்டையும் நறுவிசா வைத்து கொண்டு இருக்காள்" என்றாள். "அம்மா எதுத்து பேசறேன் என்று நினைக்காதே"- "இவ்வளுவு நல்ல குணங்கள் இருக்கும் போது பார்க்க நன்றாக இல்லை என்று ஒரே காரணுத்துக்கா வேண்டாம் என்று சொல்வது சரி இல்லை"-"நான் தான் அவள் கூட வாழ போறேன்"- "எனக்கே சரி என்று படுகிற போது- உங்களுக்கு என்னம்மா"? என்றான். விவேக்கின் அப்பா ஒரு பரமார்த்தி. பிள்ளை எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நம்புபவர். அவர் வாயே திறக்கவில்லை. சகோதரி விவேக்கிடம் "விவேக்- கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்"- "எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது- எடுக்கவும் கூடாது"-"உனக்கு நல்ல 'பெர்சனாலிட்டி"இருக்கிறது"- "இவளை அழைத்து கொண்டு வெளியில் வாசலில் சென்றால் பொருத்தமாக இருக்காது"-"பிரசன்னாவும் பிந்து கோஷும் போகிறார்கள் என்று கேலி பண்ணுவார்கள்" - "எல்லாவற்றையும் யோசிக்கணும்"- "குழந்தைகள் இவளை கொண்டு பிறந்தால்" என்றாள். விவேக் "அக்கா நீ சொல்வது சரி"- "இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது"-"முதலாவது, Beauty is only skin deep" -" உனக்கு தெரியாதது இல்லை"- "கல்யாணம் ஆனா புதிதில் மன உணர்சிகளை விட உடம்பு கவர்ச்சி முக்கியமாக படுமே ஒழிய, ஓரிரு குழந்தைகள் பெற்ற பின்னர் உடம்பை விட மனமே முக்கியமாக ஆகிவிடும்" - "சாந்தி எனக்கு ஒரு நல்ல மனைவியாக,எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக, நம் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகளாக இருப்பாள் என்று நம்புகிறேன்"-"இரண்டாவதாக marriages are made in heaven"- "இந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டு இதை விட அழகு குறைந்தவளை பண்ணிகொள்ளும் நிலைமையும் ஏற்படலாம்"- "அப்புறம் நீ சொன்னே குழந்தைகள் பற்றி- "நம் அப்பா அம்மா இருவரும் மாநிறம்"-"சராசரி உயரம்"- "உனக்கும் எனக்கும் இந்த 'கோதுமை கலர்' எங்கிருந்து வந்தது"?- "எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பெண் எவ்வளுவு முறை நிராகரிக்கப்பட்டு இருப்பாள்"-"எவ்வளுவு முறை மனதிற்குள்ளேயே ஊமை அழுகை அழுதிருப்பாள்"- "இப்போது நாமும் வேண்டாம் என்று சொல்லி விட்டால், அவள் மனசு என்ன பாடு படும்"- "அதை பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு நமக்கு இல்லையா"? "ஆண்டவன் கொடுத்த அங்க அமைப்புகளையும்,நிறத்தையும் வைத்து கொண்டு மனிதர்களை உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று வகை படுத்துவதும்,ஏற்ற-தாழ்வு பார்ப்பது அநியாயம் மட்டும் அல்ல- அக்கிரமும் கூட"ஒரு நீண்ட பிரசங்கமே செய்து முடித்தான் . விவேக்கின் பேச்சில் இருந்த உண்மைகள்- அவன் வாதத்தில் இருந்த நியாயம்- அவன் பெற்றோரையும்,சகோதரியையும் யோசிக்க வைத்தது. கடைசியில் "உனக்கு இஷ்டம் என்றால் சரி" என்றனர்.

நாகநாதன்-வசந்தா தம்பதியரின் தவிப்பா,தன்னால் தன் பெற்றோர்களுக்கு எவ்வளவு கவலை என்ற சாந்தியின் வருத்தமா, மற்றும் அவளின் உருக்கமான பிரார்த்தனையா, சிவன் தலையில் ஊற்ற பட்ட பாலா அல்லது எல்லாம் சேர்ந்த கலவையா- எது விவேக் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை அந்த குடும்பத்திற்கு கிடைக்க காரணமாக இருந்தது என்பது சொல்வது கடினம்.

No comments:

Post a Comment