Wednesday, March 12, 2014

நன்றே செய்க -------------------- எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ் ========================= நூறு கிலோமீட்டர் வேகத்தில் தன்னுடைய வண்டியை வீடு நோக்கி செலுத்திக்கொண்டு இருந்தான் குமார்.ஒரு மேற்பார்வை மற்றும் சரி-பார்க்கும் வேலைக்காக(இன்ஸ்பெக்க்ஷன்) அவனது அலுவலகத்தில் இருந்து சுமார் 150 கி.மி.தூரத்தில் இருந்தது அந்த அந்த தொழிற்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டு இருந்தான். காலை ஏழு மணிக்கே கிளம்பி, 3-மணி நேரம் பிரயாணம் செய்து, வேலை எல்லாம் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மணி இரவு ஒன்பது ஆகி விட்டது. நெடுஞ்சாலையில் 'விஷ்' 'விஷ்' என்று வாகனங்கள் கடந்து செல்லும் சப்தத்தை தவிர ஆள் அரவமே இல்லை. ஒரு 100 மீட்டர் தொலைவில் இடது பக்கமாக 'சேவை-பாதை'பிரிந்திருப்பது தெரிந்தது.மிகவும் களைப்பாக இருந்ததால் தேநீர் அறிந்துவிட்டு பயணத்தை தொடரலாம் என்று நினைத்து வண்டியை இடது பக்கம் ஒடித்தான் குமார்..அப்போதுதான் அந்த காட்சியை கண்டான். ஒரு பக்கம் மோட்டார் பைக் உருண்டு கிடக்க ரத்த வெள்ளத்தில் ஒரு 20-22 வயது மதிக்கத்தக்க வாலிபன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தான்.அசுர வேகத்தில் சென்ற ஏதோ ஓர் வாகனம் பின்னாடியில் இருந்து மோதி தள்ளியிருக்க வேண்டும். ஒரு நிமிடம் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அடிபட்ட வாலிபனை அப்படியே விட்டு போகவும் மனமில்லை. மருத்துவமனை,காவல்,நீதிமன்றம்,வழக்கு என்று பிரச்சனைகளில் மாட்டி கொள்ள விருப்பமும் இல்லை.கடைசியில் மனிதாபிமானமே வென்றது. முதல் காரியமாக தன் கைபேசியை எடுத்து காவல் துறைக்கு செய்தி சொன்னான்."மிகுந்த ரத்த சேதம் ஆகியிருப்பதாக தெரிவதால் நான் அடிபட்ட நபரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறேன்"-"நீங்கள் நேராகவோ அல்லது விபத்து நடந்த இடத்துக்கு சென்று பின்னர் அங்கிருந்தோ மருத்துவமனைக்கு வரலாம்"-"நான் அங்கே உங்களுக்காக காத்திருக்கிறேன்" என்றான். பின்னர் அடிபட்ட நபரின் அருகில் சென்று பார்த்தான்.தன் மகன் அசோக்கை போல தோற்றமளிப்பதை போல் இருந்தது.ஈன ஸ்வரத்தில் 'அப்பா என்னை காப்பாற்றுங்கள்" என்று முனகுவது போல தோன்றியது.எங்கோ ஜம்ஷெட்பூரில் இருக்கும் தன் மகனின் நினைப்பு வந்தது வெறும் மன-பிராந்தியாக இருக்கும் என்று தன்னை-தானே சமாதான படுத்திகொண்டான். ஒரு பக்கமாக விழுந்து இருந்ததால் பின் மண்டையில் அடி படவில்லை.தாவாங்கட்டை பெயர்ந்து இருந்தது.வலது தொடையில் இருந்து ரத்தம் பெருகி கொண்டு இருந்தது. கைபேசி இருக்கிறதா என்று தேடினான். இருந்தது ஆனால் அது அணைந்து இருந்தது. கடைசியாக மனைவி கலாவை தொடர்பு கொண்டு "நான் வரும் வழியில் ஒரு விபத்தில் அடிபட்ட வாலிபனை பார்க்க நேர்ந்தது"-"அவனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது"-"ஒன்றும் கவலைப்படாதே"-"வீடு வந்து சேருவதை பற்றி இப்போது சொல்ல முடியாது"-"அப்புறம் தொடர்பு கொள்கிறேன்"என்றான். "ஏங்க உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறதே" என்றவளிடம் . "எவ்வளுவு தலை-போகிற விஷயமாக இருந்தாலும் அதை கேட்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை"-" பையனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன்"என்று தொடர்பை துண்டித்துவிட்டான். அடிபட்ட வாலிபனை தூக்கி தன் வண்டியின் பின் இருக்கையில் கிடத்தினான். விளம்பர பலகை/வழிகாட்டி பலகையின் உதவியோடு அருகில் இருந்த மருத்தவமனையை கண்டுபிடித்தான். நல்ல காலம்,பணியில் இருந்த மருத்துவர் நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்பட்டார். "சீக்கிரம் காயங்களுக்கு தையல் போடுங்கள்"- ரத்தம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று உத்தரவுகளாக பிறப்பித்தார். அதற்குள் காவல் துறையினரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் "நான் தான் குமார்"-உங்களுக்கு தகவல் தந்தவன்"- என்று நடந்ததை விவரமாக கூறினான். அதை எழுத்து மூலமாக அறிக்கையாக கொடுக்க சொன்னார்கள். வாலிபனது கைபேசியை எடுத்து அதற்கு சக்தி கொடுத்து அதில் இருந்த அவனது பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.மருத்துவரும்"குமார் ஐயா"- "வாலிபன் அபாய கட்டத்தை தாண்டி விட்டான்"-"இனி உயிருக்கு ஆபத்து இல்லை"-"நீங்கள் தகுந்த சமயத்தில் கொண்டு வந்து சேர்த்ததே இதற்கு முக்கிய காரணம்"என்றார். இதெல்லாம் முடிய மணி அதிகாலை 4 ஆகி விட்டது. காவல் துறை அதிகாரியிடம் "நான் கிளம்புகிறேன்"-"மேற்படி எந்த தகவல் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றான். அதிகாரியும் "மிக்க நன்றி"-"உங்கள் மாதிரி பொறுப்புடன் நடந்து கொள்பவர்கள் அரிது"-"பாக்கி ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்" என்று விடை கொடுத்தார். மிகுந்த அயற்சியுடனும் வண்டி ஓட்டி வந்த களைப்புடனும் வீட்டுக்குள் நுழைந்தான். "அப்பாடி நல்ல வேளையாக வந்து சேர்ந்தீர்கள்"-"தொலைபேசி அழைப்பே இல்லையே என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தேன்" என்ற கலா தொடர்ந்து "என்னங்க பையன் பிழைத்து விட்டான் தானே"?-"உயிருக்கு ஆபத்து இல்லை தானே"?என்று கேட்டாள்."அதல்லாம் ஒன்றும் கவலை இல்லை"-"அவன் பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது" என்றான் குமார். பிறகு தன்னை சிறிது ஆசுவாச படுத்தி கொண்டு,காபி அருந்திய பின்,"ஆமாம் நேற்று இரவு நான் தொடர்பு கொண்டபோது ஏதோ முக்கியமான விஷயம் என்றாயே"-"இப்போது சொல் அது என்ன" என்றான். கண்களில் நீர் பனிக்க கலா தொடங்கினாள் "இதை என்ன அதிசயம் என்பதா அல்லது எதேச்சையான செயல் என்பதா என்றே புரியவில்லை"-"நேற்று உங்கள் அழைப்பு வருவதற்கு சற்று முன்னர் நம்ம அசோக் (அவர்களின் ஒரே பையன்-ஜம்ஷட்பூரில் எக்ஸ்.எல்.ஆர்.ஐயில்-முதலாண்டு எம்.பி.ஏ படிப்பவன்) ஒரு விபத்தில் மாட்டி கொண்டு விட்டதாக அவன் நண்பனிடம் இருந்து தகவல் வந்தது"-"எனக்கு கையும் ஓடவில்லை"-"காலும் ஓடவில்லை"-"உங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றால் நீங்களே ஒரு பிரச்னையில் இருந்தீர்கள்"-"ஈஸ்வரோ ரக்ஷது என்று நம் குலதெய்வம் சாமிநாத சாமிக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிட்டு ராத்திரி முழுக்க பூஜை அறையிலேயே பழி கிடந்தேன்" -"என் கண்மணிக்கு உயிர் பிச்சை கொடு என்று மனமுருகி பிரார்த்தித்ததற்கு பலன் கிடைத்து விட்டது"-"விடிகாலை ஐந்து மணிக்கு அதே நண்பன் தொடர்பு கொண்டு அசோக்கிற்கு அடி பலமில்லை- கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினான்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். நேற்று இரவு தன் மன-பிராந்திக்கான காரணத்தை அறிந்து கொண்ட குமார் தன்னையும் அறியாமல் இரு கரம் கூப்பி அந்த சுவாமிநாத சுவாமிக்கு நன்றி செலுத்தினான்

No comments:

Post a Comment