Wednesday, March 5, 2014

மன மாற்றம்
------------------------
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
=====================
ரமணனின் கையில் இருந்து செய்தித்தாள் 'வெடு'கென்று பிடுங்கப்பட்டது. பிடுங்கியது அவரது மகன் திரு கார்த்திக். பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை அதிகாரி."நீங்கள் ஆத்தில் தானே இருக்கிறீர்கள்"-" அப்புறம் நிதானமாக பார்த்தால் போதாதா"?"எனக்கு போட்டியாக இப்போதுதான் பார்க்க வேண்டுமா" ?என்று கடுமையான சொற்கள் வேறு. "எனக்கு ஒன்றும் ...அவசரம் இல்லை"- "ஒருவரும் பார்க்க வில்லையே என்றுதான் பிரட்டி கொண்டிருந்தேன்" என்று சமாதானாமாக கூறினார் ரமணன்.

"தங்கம்- இங்கே கொஞ்சம் வரயா"?-"இரண்டாவது தடவை 'காபி' குடுக்கிறாயா"? என்று தன மனைவியை விளித்தார். பதில் வந்ததோ மாட்டு-பெண் சுமித்ராவிடம் இருந்து "இப்ப என்ன அவசரம் காப்பிக்கு"? "முதல்லே அம்மா உங்க பிள்ளைக்கு சிற்றுண்டி தயார் செய்து முடிக்கட்டும்"-"அப்புறம் இருக்கவே இருக்கிறது உங்களுக்கு 'காபி' கொடுப்பது " என்று குண்டூசியால் குத்துவதை போல் வார்த்தைகளால் குத்தினாள். தங்கம் இடையில் புகுந்து "அதில்லை சுமித்ரா"-"அப்பா இப்போ 'ரத்த-கொதிப்பு மாத்திரை சாப்பிடணும்"_"காபியை குடித்து விட்டு போட்டுக்கலாம் என்று கேட்டு இருக்கிறார்" என்றாள்.

ரமணன் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிந்து மூன்று மாதம் முன்பு ஒய்வு பெற்றவர். அதிலிருந்து அவருக்கும் சரி அவர் மனைவி தங்கத்துக்கும் சரி வாழ்க்கை நரகமாகி விட்டது. மகன் கார்த்திக்கும் மருமகள் சுமித்ராவும் வார்த்தைகளால் குத்துவதையே வழக்கமாக்கி கொண்டுவிட்டார்கள். மிகுந்த ஆசையோடும்,பிரியத்தோடும் இருந்தவர்கள் தான். ஓய்வு பெற்றதினால் வருமானம் நின்று விட்டது என்ற எண்ணத்தினாலோ, குடும்பத்துக்கு பாரமாக ஆகிவிட்டார் என்று தோன்றியதாலோ-என்ன காரணமோ சதா சர்வ காலமும் ஊசி பட்டாசாக வார்த்தைகளை பிரயோகித்தனர் கார்த்திக்கும்,சுமித்ராவும். உட்கார்ந்தால்,குற்றம்,எழுந்தால் குற்றம். சீக்கிரம் குளித்தால் " உங்களுக்கு இப்போ என்ன அவசரம்"?-"அவர் அலுவலகத்திற்கும் ,குழந்தைகள் பள்ளிக்கும் கிளம்ப வேண்டாமா"? என்று கத்தல். தாமதமாக குளிக்கலாம் என்று காத்து கொண்டிருந்தால் "வயசு ஆகி இருக்கிறதே வழிய இங்கிதம் கிடையாது"-"காலையில் சீக்கிரம் குளித்து விட்டு பூஜை அறையில் நேரத்தை செலவழிப்போமே என்று தோணாதோ"? என்ற அங்கலாய்ப்பு.

ஏதோ குழந்தைகள் ஆர்த்தியும் (10 வயது - 5ம் வகுப்பு) ஆகாஷும் (6 வயது-2ம் வகுப்பு) ஒட்டுதலாக இருப்பதால் ஓடி கொண்டு இருந்தது. பேத்தி சொல்லுவாள் "அம்மா பாட்டுக்கு சொல்லி கொண்டு இருக்கட்டும் பாட்டி"- "நீங்க ஒண்ணும் மனசில எடுத்துக்காதீங்க" என்று. ஆகாஷ் இன்னும் சிறியவன் ஆனதால் "தாத்தா-நேற்று ராத்திரி என் சொப்பனத்தில் ஒரு தேவதை வந்தாள்"-"அவளிடம் அப்பா-அம்மா மனசில் புகுந்து உங்களை மரியாதையுடன் நடத்துமாறு மாற்ற சொல்லி இருக்கிறேன்" என்று குழந்தைத்தனமாக கூறுவான். தாத்தா-பாட்டி தங்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து,வாயெல்லாம் பல்லாக "என் ராஜா- என் செல்லம்" என்று பேரனை உச்சி முகருவார்கள்.

தங்கம் அதுவும் ரமணனை உள்ளங்கையில் வைத்து தாங்குபவள். கணவரை யாராவது ஏதாவது சொன்னால் தாங்க மாட்டாள். ஒரு முறை சொல்லி கூட இருக்கிறாள்"ஏங்க- நமக்கு என்ன தலைஎழுத்து இவங்க பேச்சை கேட்டு கொண்டு இங்க இருக்கணும் என்று?"-"உங்க ஓய்வு தொகையில் ஒரு பகுதியை ஏதாவது 'முதியோர் இல்லத்தில்' வைப்பு நிதியாக செலுத்திவிட்டு அங்கே போய் நிம்மதியாக இருப்போமே" என்று. ரமணன் தான் அவளுக்கு புரிய வைப்பார் "அசடு- வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாதே"-"தலைமுறை இடைவெளி-மற்றும் தற்கால 'அவசர வாழ்க்கை' முறை ஆகியவற்றால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படுவது சகஜம்"-"அதற்காக மூட்டை முடிச்சை தூக்கி கொண்டு கிளம்புவது தீர்வு அல்ல"- "நாம் போய்விட்டால் பெரியவர்களின் ஆதரவும் அறிவுரைகளும் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்?- "குழந்தைகள் எவ்வளுவு ஒரு அன்பான,அக்கறையான சூழ்நிலையில் வளர்கிறார்கள்"-"இதையெல்லாம் யோசித்து பார்க்க வேண்டாமா" ?என்பார். அவர் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தங்கம் "நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான்" என்று ஒப்பு கொள்வாள்.

பக்கத்து வீட்டு பாரதி மாமி "சுமித்ரா- உன் மாமியார் இருக்கிறார்களா"? என்று கேட்டாள். "என்ன விஷயம் மாமி"என்றாள் சுமித்ரா. "ஒன்றும் இல்லை"- ஒரு வாரமாக வாயெல்லாம் புண்ணுடன் ரொம்ப கழ்டப்பட்டேன்"-"தங்கம் மாமி தான் தேங்காயை துருவி அதன் பாலை பிழிந்து வாயில் அடக்கி கொள்ளுமாறு வைத்தியம் சொன்னாள்"-"இப்போ நல்லா தேவலை"-அதான் நன்றி சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள்."பெரியவா ஆத்தோடு இருந்தா எவ்வளவு வசதியா இருக்கு"-"நமக்கு தான் அவா அருமை தெரியலே" என்றாள்.மாமி பொதுவாக சொன்னாலும் தன்னை தான் குறிப்பிட்டு சொல்கிறாளோ என்று சுருகென்றது சுமித்ராவுக்கு.

அலுவலகத்தில் மேலதிகாரி கார்த்திக்கை கூப்பிட்டு அனுப்பினார்."கார்த்திக்- இந்த மாசு-கட்டுப்பாடு சான்றிதழ் விஷயம் ரொம்ப நாளாக இழுக்க அடித்து கொண்டு இருக்கிறது"-" சான்றிதழ் நம் கைக்கு வரவில்லை என்றால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையில் மற்றும் ஏற்றுமதியில் பெரிய பிரச்சனை வர கூடும்" -"நீ மிகுந்த திறமைசாலி என்பதால் தான் இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" "நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். "என் மேல் இந்த அளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு ரொம்ப நன்றி" "முழு முயற்சியும் செய்கிறேன் ஐயா" என்று பணிவுடன் கூறினான் கார்த்திக்.

அறையை விட்டு வெளி ஏறிகொண்டு இருந்த கார்த்திக்கை மேலதிகாரி "ஒரு நிமிடம் கார்த்திக்"-"எனக்கு கிடைத்த தகவல்படி இப்போது பதவியில் இருக்கும் அதிகாரி, எல்லா முடிவுகளும், தனக்கு முன் இந்த பதவியில் இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, அதிகாரியை கலந்து ஆலோசித்த பின்னரே எடுப்பதாக கேள்வி"-"அவரை போய் பார்ப்பது பயனளிக்க கூடும் என்று தோன்றுகிறது" என்றார்- "எல்லா கோணங்களிலும் முயற்சி செய்து வெற்றி அடைய பார்கிறேன் ஐயா" என்றான் கார்த்திக்.

மாசு கட்டுப்பாடு அலுவலகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியின் தொலைபேசி எண்ணை பெற்று கொண்டு அவரை முதலில் பார்க்கலாம் என்று நினைத்தான் கார்த்திக். ராஜா அண்ணாமலை புறத்தில் இருந்த அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அறிமுக படுத்திக்கொண்ட பின்னர், இன்ன விஷயமாக அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினான் அவன். எப்போது வேணுமானாலும் வரலாம் என்றும் தன்னால் முடிந்த உதவியை கட்டாயம் செய்வதாகவும் அன்போடு கூறினார் அந்த அதிகாரி. அவரை சந்தித்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தாங்கள் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தணிக்கை அதிகாரி திரு ரமணனின் மகன்தானே"? என்று. கார்த்திக் ஆமாம் என்று தலை ஆட்டியவுடன் "உங்கள் அப்பாவிடம் நான் அலுவலக வேலை நிமித்தமாக பல முறை தொடர்பு கொண்டு இருக்கிறேன்"-"அந்த மாதிரி ஒரு நேர்மையான அதிகாரியை நான் சந்தித்ததே இல்லை"-"அவருடைய மகனாகிய தங்களுக்கும் அதே நேர்மை உணர்வு இருக்கும்"- "இப்போதே நான் எங்கள் அலுவலக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு தேவையான சான்றிதழை வெளியிட சொல்கிறேன்"என்றார். "ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை"-"இந்த நன்-மதிப்புக்காகவும் நற்பெயருக்காகவும் என் அப்பாவுக்கு எந்த அளவு கடமை பட்டுள்ளேனோ அதே அளவு உங்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன் " என்று கூறி விடை பெற்றான்.

அன்று இரவு வீடு திரும்பிய கார்த்திக், சுமித்ராவிடம் நடந்ததை எல்லாம் கூறினான். கேட்டு கொண்ட சுமித்ரா தன் பங்குக்கு பாரதி மாமி சொன்னதை தெரிவித்தாள். கூடவே "இதோ பாருங்க"-"ரெண்டு பேருக்கும், ஒரே நாளிலே,கிட்டத்தட்ட ஒரே மாதிரி --பெரியவாளோட அருமையை புரிய வைக்கிற மாதிரி நிகழ்ச்சி நடந்து இருக்கிறது என்றால் இது தற்செயல் அல்ல" என்றாள். அவள் கூற்றை ஆமோதித்த கார்த்திக் "நமக்கு எதையோ புரிய வைக்க-நம்ம கண்ணை திறக்கிறதுக்காகத்தான் இது நடந்து இருக்கிறது என்று தோன்றுகிறது" -"வா அப்பா அம்மாவை போய் நமஸ்காரம் பண்ணிட்டு"-"நம்ம தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டு"-"இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துப்போம்" என்றான்.

ரமணன்-தங்கம் இருவருக்கும் திடீரென்று தங்களை நிற்க வைத்து "இன்றுதான் எங்கள் இருவருக்கும் உங்கள் அருமை புரிந்தது"-"எங்களை மன்னியுங்கள்" என்று கூறி மகனும்-மருமகளும் ஏன் தங்கள் காலில் விழுகிறார்கள் என்று புரியவில்லை

No comments:

Post a Comment