Wednesday, March 12, 2014
யாகாவாராயினும் நாகாக்க......
========================
எழுதியவர்:சுந்தரேசன் சுரேஷ்
------------------------------------------
மருத்துவர் ஷ்யாம்சுந்தர் சட்டர்ஜி ஒரு காது-மூக்கு-தொண்டை நிபுணர். ரங்கநாத பாகவதரின் தொண்டையை பல்வேறு விதமாக பரிசோதனை செய்த பின் உதட்டை பிதுக்கினார்- "என்ன பிரச்னை என்று குறிப்பிட்டு சொல்வது கடினம்"- குரல் பெட்டி (வாய்ஸ் பாக்ஸ்) மற்றும் குரல் நரம்புகள் (வோகல் கார்ட்ஸ்) பழுது அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன"- "திரும்ப பாட முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார். "நம்பிக்கையுடன் இருங்கள்"-"என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்”-“இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் கூட தங்கள் குரலை திரும்ப பெற்று இருக்கிறார்கள்"-“மருத்துவர்கள் கடவுளாக முடியாது”-“ஆனால் கடவுள் மருத்துவர் ஆக்லாம்” என்று கூறி விடை பெற்றார்.
பாகவதரின் மனைவி சாந்தியும் மகள் ஸ்வேதாவும் இடிந்து போய் விட்டனர். சென்னை மருத்துவர்கள் எல்லாம் கை-விட்டு விட்ட நிலயில் கொல்கத்தாவில் இருந்து பிரத்யேகமாக வந்திருந்த நிபுணராவது ஏதாவது நல்ல பதிலாக சொல்வார் என்ற எதிர்பார்போடு இருந்தவர்களின் நம்பிக்கையும் பொய்த்துவிட்ட்து..
விஷயம் இதுதான். ரங்கநாத பாகவதர் ஒரு பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான். 'கலைமாமணி','சங்கீத கலாநிதி' என்று பட்டங்கள் பெற்றவர். மார்கழியில் மியூசிக் அகாடமியில் சாயங்கால கச்சேரி செய்பவர். இவர் கச்சேரி எங்கே நடந்தாலும் சென்னை போக்குவரத்து காவல்துறையினருக்கு பெரிய பிரச்னை. மோட்டார் வண்டியில் அத்தனை கனவான்களும்,சீமான்களும்,சீமாட்டிகளும் கச்சேரிக்கு படை எடுப்பார்கள்- விளைவு மாநகரத்தின் சாலைகளில் எல்லாம் வாகனங்களின் தேக்கம் ஆகிவிடும். பட்டு புடவைகளும்,வைர தோடுகளும்,இவரது காம்போஜியையும்,கல்யாணியையும் கேட்டு உருகும், மத்யமாவதியில் நகுமோமோ என்று ஆரம்பித்தால் ரசிகர்கள் மெய் மறந்து கேட்பார்கள்.ஆறு மாதத்துக்கு முன்பாகவே கச்சேரிக்கு தேதி வாங்க வேண்டும். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி என்று வெளி நாடுகளிலும் இவருக்கு அமோக வரவேற்பு. ஆசாரம் அனுஷ்டானம் மிக்கவர். 'செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்' குருகுல வாசம் செய்தவர்.
பெரும்பாலும் எல்லாமே நல்ல குணங்கள் கொண்டவராக இருந்தாலும் சற்று அகந்தையும்,அகங்காரமும் கொண்டவர் பாகவதர். ஆறு மாதங்கள் முன் நடந்த நிகழ்ச்சி- தெருவில் குப்பை பொறுக்கும் ஒரு பத்து வயது சிறுமி திடீரென்று பாகவதரின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள். அடையாறு,கஸ்தூரிபா நகரில் பிரமாண்டமான பங்களா.நிதி சால சுகமா என்று கல்யாணியில் சாதகம் செய்துகொண்டிரிந்த பாகவதரை அணுகி "எனக்கும் பாடணும் என்று ரொம்ப ஆசை"-"எனக்கு பாட்டு கத்து குடுக்கிறீங்களா"? என்று வெகுளியாக கேட்டாள்.
கோபம் தலைக்கேறிய பாகவதர் "ஏ சாந்தி"-"எங்க ஒழிஞ்சு போயிட்ட"?"நான் சாதகம் பண்ணிக்கொண்டு இருக்கிறது தெரியலே"?"கண்ட கழிசடை எல்லாம் வீடு புகுந்து சாதகத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது" என்று கத்தினார். பின் அந்த சிறுமியின் மீது தன் கோபத்தை திருப்பி "மூதேவி- எச்சகலை பொறுக்கறது எல்லாம் சங்கீதம் கத்துக்க முடியாது"-"என்னை மாதிரி ஆசார அனுஷ்டானத்தோடு இருக்கணும் "-"அப்பதான் சரஸ்வதி கடாக்ஷம் இருக்கும்"-"இந்த ஜன்மத்திலே உனக்கு அந்த கொடுப்பினை இருப்பதாக தெரியலை"- "எடத்தை காலி பண்ணு" என்று கத்தி ஓய்ந்தார்.
“ஏனுங்க இந்த எகிறு எகிற்றீங்க”?”நீங்க் என்ன பிறக்கற்த்தேயே பாட்டு பாடிகினு பிறந்தீங்க”?”ஏதோ ஒரு மவராசன் கிட்டே கத்துகிட்டு அப்பாலே தான் பாடுறீங்க”?”எனக்கும் கத்து குடுத்தா நானும் பாடிட்டு போறேன்”? நாளக்கே உங்களுக்கு தொண்டயிலே எதுனா கோளாறு ஆனா பாட முடிமா” என்று மனம் போன போக்கில் அந்த பெண் பேசியது.
தற்செயலாக நடந்ததோ இல்லை அந்த சிறுமியின் ஆதங்கமோ என்ன காரணமோ அடுத்த நாளே பாகவதருக்கு தொண்டையில் ஒரே எரிச்சல்,வலி. சாதாரண கைவைத்தியம்,அலோபதி,என்று காண்பித்தும் ஒன்றும் பயன் இல்லை. வாயை திறந்து பேசுவதே பெரும் பாடாக ஆகி விட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமாகி கடைசியில் வாயை திறந்தால் சத்தமே வராமல் வெறும் காற்று தான் வந்தது. சாந்தி பயந்தபடியே"என்னங்க-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"நீங்கள் அந்த பிச்சைகார பெண்ணை அப்படி திட்டி இருக்க வேண்டாம்"-"அன்றில் இருந்துதான் உங்களுக்கு படுத்துகிறது"என்றாள். "போடி பைத்தியம்"- "காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்களே"-"அந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு" -"சரியாக ஆகிவிடும்"-"கவலை படாதே"என்றார் பாகவதர்.
ஸ்வேதாவும் அம்மாவின் கருத்துடன் ஒத்து போனாள்.இரண்டு பேருமாக பல அனாதை இல்லங்களுக்கு போய் பெண் சிறுமிகளுக்கு துணி மணிகள் வாங்கி கொடுத்தனர்;சாப்பாடு போட்டனர்.கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெண் தெய்வங்களுக்கு பாலாகவும்,தேனாகவும் அபிஷேகம் செய்தனர்.ஸ்வேதாவும் ஓரளவு வாய்பாட்டில் தேர்ச்சி பெற்றவள்தான். பந்துவராளியில் ராம் தய ஜூடவே என்ற் பத்ராசல் ராம்தாஸரின் கீர்த்தனயை உளமுருகி பாடினாள். கேட்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைதாலும் தயவு செய்ய ராமனின் மனம் குளிரவில்லையோ என்னவோ பாகவதரின் நிலமையில் ஒரு மாறுதலும் இல்லை.
விஷயம் மெல்ல வெளியே கசிந்து,பாகவதரின் பல ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களையும்,பரிகாரங்களையும் தொலைபேசி மூலமாகவும்,நேரில் வந்தும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். பல்லாயிரகணக்கான ரசிகர்களின் தன்னலமற்ற பிரார்த்தனை பலன் அளிக்காமலா போய் விடும்?
ஒரு நாள் மருத்துவர் சட்டர்ஜியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பாகவதர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தபின் ஸ்வேதாவிடம் "அம்மா-நீ என் மகளை போல் என்பதால் சொல்கிறேன்"-"இதை நான் ஒரு மருத்துவராக சொல்ல வில்லை"-"ஒரு மனிசாபினாம் உள்ள வங்காளியாக்- காளியின் உண்மையான பக்தனாக சொல்கிறேன்"-"கொல்கத்தா ,காளிகாட் காளி பிரசித்தமானவள்"-மிகவும் சக்தி வாய்ந்தவள்"-“நீங்கள் கேள்வி பட்டிருக்க கூடும்”-"இந்த காளிக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ நாக்கு வாங்கி சாற்றுவதாக வேண்டி கொண்டு பாருங்கள்"-"நிச்சயம் உன் அப்பா குணம் அடைவார் என்று என் உள்மனசுக்கு படுகிறது"-"உன் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லு"-"நான் பிற்பாடு மறுபடி தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்" என்று கூறினார்.
ஸ்வேதா சாந்தியிடம் ஆலோசனை செய்து கொல்கத்தாவில் இருந்த உறவினர் ஒருவர் மூலம் 4-பவுனில் ஒரு தங்க நாக்கு வாங்கி காளிக்கு சாற்ற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிசயம் என்பதா பிரார்த்தனையின் பலன் என்பதா பாகவதருக்கு குரல் வளம் திரும்பியது. முதலில் பேச தொடங்கினார் பின்பு சாதகம் பண்ணவும் ஆரம்பித்தார். மருத்துவர் ஷ்யாம் சுந்தர் சட்டர்ஜிக்கு தொலைபேசியில் தகவலும் நன்றியும் தெரிவிக்கபட்டது.கிட்ட்தட்ட பழைய் நிலைக்கு திரும்பி விட்டார்.க்ச்சேரி செய்ய முடியும் என்ற் நம்பிக்கையும் பிறந்தது. மறுநாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் கச்சேரி ஏற்பாடு ஆகி இருந்தது. குரல் வளம் திரும்பிய பின் பாகவதரின் முதல் கச்சேரி.
கச்சேரிக்கு புறப்படுவதற்கு தயாராக, மோட்டார் வண்டியில் ஏற பாகவதர் பங்களாவின் வெளியே வந்தார். எதேச்சையாக ஒரு பிச்சைகார சிறுமி குறுக்கே கடந்தாள். இம்முறை பாகவதரின் கண்களுக்கு அவள் பிச்சைக்காரியாக தென்படாமல் சாக்ஷாத் கொல்கத்தா காளியாகவே தென்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
Like · · Share
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment